உக்ரைனில் ரஷ்ய ராணுவ படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அந்நாட்டிற்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஐந்து மாதங்களாக நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ளன. அதே வேளையில் உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவ படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றது. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே வருகின்றது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ராணுவ படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. அங்கு உக்ரைன் ராணுவத்துக்கு உதவும் விதமாக பல கொரில்லா படைகள் உருவாகியுள்ளன.
இந்த கொரில்லா படைகளை சேர்ந்தவர்கள் ரஷ்ய சார்பு அதிகாரிகளை கொலை செய்வது, ரஷ்ய ராணுவ படைகளின் நகர்வை தடுக்கும் விதமாக பாலங்கள் மற்றும் ரெயில்பாதைகளை தகர்ப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். அதிகரித்து வரும் எதிர்ப்பு ரஷ்ய ராணுவ படைகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் கேள்விக் குறியாகியுள்ளன. இதற்கிடையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தில் உள்ள ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இருப்பினும் இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.