உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 106 நாளை கடந்து உள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே நேரத்தில் போர் தொடங்கியது முதல் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் செயல்பட்டு வரும் தங்கள் கிளைகளை மூடியுள்ளது. அதன்படி கார் உற்பத்தியில் இருந்து உணவகம் வரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் இளம் தொழில் அதிபர்களுடன் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “இன்றைய சூழ்நிலையில் யாரேனும் எங்கிருந்தாவது வெளியேறினால், நடவடிக்கைகளை நிறுத்தினால் அவர்கள் தான் அதற்கு மிகவும் வருத்தப்படுவார்கள். அதனை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து வெளியேறிய நிறுவனங்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். ஏனென்றால் நான் மிகுந்த சந்தை மதிப்பு கொண்ட நாடு. ரஷ்யாவிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியது மேற்கத்திய நாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு ஆதாரம் ஆகும். மேலும் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டுமென கட்டாயத்தால் பல நிறுவனங்கள் வருத்தப்படுகின்றன. சுயமாக முடிவெடுக்க முடியாத நாடுகளின் வெளிப்பாடே இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.