Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர்…. பெற்றோரின் உருக்கமான பேச்சு…. அரசின் தீவிர நடவடிக்கை…!!

உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் மனம் மாறி நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் சுப்ரமணியன் பாளையத்தில் ரவிச்சந்திரன்-ஜான்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் நிகேஷ், ரோகித் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சாய் நிகேஷ் காரமடையில் இருக்கும் ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலிருந்தே சாய் நிகேஷுக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் சாய் நிகேஷால் ராணுவத்தில் சேர இயலவில்லை. இதனால் சாய் நிகேஷ் உக்ரைன் நாட்டிற்கு சென்று அங்குள்ள பல்கலைக் கழகத்தில் விமானவியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே போர் ஏற்பட்டதால் இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். ஆனால் சாய் நிகேஷ் உக்ரைனில் இருக்கும் ஜார்ஜியா நேஷனல் லெஜியன் துணை ராணுவ பிரிவில் சேர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக போரிட்டு வருகிறார்.

இதனை அறிந்த சாய் நிகேஷின் பெற்றோர் அவரை தொடர்பு கொண்டு நாட்டுக்கு திரும்பி வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறி விட்டதாக கூறி சாய் நிகேஷ் மகிழ்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெற்றோர் இந்திய வெளியுறவு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சாய் நிகேஷின் பெற்றோர் உன்னை பார்க்க ஆசையாக உள்ளது; உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள்; உடனடியாக நமது நாட்டிற்கு திரும்பி வா என்று உருக்கமாகப் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இதனைக் கேட்ட சாய் நிகேஷ் தனது பிடிவாதத்தை விட்டு நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாய் நிகேஷை இந்தியா அழைத்து வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |