உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் கட்டாயம் இந்த மொபைல் ஆப் இருக்க வேண்டும். தனிநபரின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறை காவல் உதவி செயலியை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்களின் செல்போன் வாயிலாக புகார்களை நேரடியாக தெரிவிக்க டயல் 100 என்ற செய்தி காவல் உதவியோடு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக காவல் துறையை தொடர்பு கொள்ளும்போது அந்த எண்ணின் உரிமையாளர் யார் எங்கிருந்து பேசுகிறார் என்பதை உடனே அறிந்து அவருக்கான உதவியை காவல்துறையால் வழங்க முடியும்.
பெண்கள், சிறுவர்கள்,முதியவர்கள் உள்ளிட்டோர் ஆபத்தில் சிக்கி இருக்கும்போது தனது செல்போனில் உள்ள இந்த செயலியில் அவசரம் என்ற சிவப்பு நிற பட்டனை அழுத்தினால்,அவரது விபரம் அவர் இருக்கும் இருப்பிட விவரம் மற்றும் வீடியோ என அனைத்தும் பதிவு செய்யப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். அதன் மூலமாக அவருக்கு அவசர உதவியை வழங்க முடியும். ஒருவேளை பொதுமக்கள் பயணத்தில் இருக்கும்போது தங்களுக்கு ஏதேனும் ஆபத்து இருந்தால் காவல்துறையிடம் அவசர உதவி தேவைப்பட்டால் வாட்ஸ் அப் மற்றும் கூகுள் மேப் மூலமாக தங்களின் உறவினர் அல்லது நண்பர் இருப்பிடத்தை பகிர்ந்து அதன் மூலம் ஆபத்தில் இருப்பவர் இருக்கும் இடத்திற்கு போலீசார் விரைந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் காவல் நிலையத்தில் இருப்பிடத்தை அறியும் வசதி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களைத் தெரிந்து கொள்ளும் வசதி, ஆன்லைன் பண மோசடி குறித்து புகார் தெரிவிக்கும் வசதி, மற்ற புகார்களை அளிக்கும் வசதி, அவசர கால எச்சரிக்கைகள்,தகவல்களைப் பெறும் வசதி மற்றும் வாகன விபரங்களை அறிந்து கொள்ளும் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன. மேலும் காவல்துறைக்கு செலுத்தவேண்டிய அபராதங்களை இந்த செயலியின் மூலமாக பொதுமக்கள் செலுத்தமுடியும். கூகுள் பிளே ஸ்டோரில் kaaval uthaviஎன டைப் செய்து தேடினால் இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.