நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 7 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார்..
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, ஒரு நாள் கூட உங்களுக்கு இதற்கான அவகாசத்தை வழங்க முடியாது. உங்களால் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் நடத்த முடிகிறது. தேர்தலுக்கான அரசியல் கூட்டங்கள் நடத்த முடிகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் மட்டும் நடத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்..
இதனையடுத்து முகுல்ரோத்தகி, சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 7 மாத கால அவகாசம் தேவையில்லை. ஒரு மூன்றில் இருந்து நான்கு மாத கால அவகாசம் வேண்டும். நாங்கள் கேட்பதிலிருந்து பாதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. பின்னர் நீதிபதி, தொடர்ந்து கால அவகாசம் எதற்கு கேட்கிறீர்கள் என்பது தொடர்பாக 2 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.