சேலம் இரும்பாலையிலுள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து குடோனில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் பேட்டி அளித்ததாவது “மருத்துவ சேவையில் எவ்வித குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் இருக்கிறது. இதில் அத்தியாவசியமான மருந்துகள் 322 வகை, ஸ்பெஷாலிட்டி மருந்துகள் 302 வகைகள் இருக்கிறது. இப்போது 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு இருக்கிறது.
எனினும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் வாங்கிக்கொள்ள நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மருந்துதட்டுப்பாடு இருந்தால், பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இதுவரையிலும் 76 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாரோ எழுதிக்கொடுத்ததை வைத்து எடப்பாடி பழனிசாமி மருந்துகள் இல்லை என தெரிவித்து இருக்கிறார். ஆகவே எடப்பாடிக்கு நேரமிருந்தால் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கிடங்குகளில் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளலாம். அவர் ஆய்வு மேற்கொள்ள அனுமதி தருகிறோம். வழக்கு எல்லாம் போட மாட்டோம் என்று அவர் பேசினார்.