தமிழகத்தில் ஊழல் செய்பவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பா.ஜ.க அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்காக டெல்லி அலறும்படி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்பும் இல்லாதது போல் அவர்கள் நடிக்கின்றனர் எனவும், 83 சதவீதம் பங்கு இருப்பதால்தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது எனவும் கூறினார்.
எனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நாடகத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். இதனையடுத்து தமிழக அரசின் மீது நான் சுமத்தும் குற்றங்களில் நம்பகத்தன்மை இல்லையென்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது என் வழக்கு தொடரட்டும் என்றும், அதை சமாளிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் எனவும் அண்ணாமலை கூறினார். அதன்பிறகு தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இனி மாதம்தோறும் வெளியிடப்படும் என்றார். இந்நிலையில் தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் நேரடியாகவே ஊழல் செய்வதாகவும், நியூட்ரிசன் கிட் சென்டர் திறக்கப்படாமல் இருப்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபகாலமாகவே பத்திரிக்கையாளர்களை எதற்காக சந்திக்காமல் இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து தி.முக. ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து தமிழக காவல்துறையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான விளக்கத்தை தமிழக முதல்வர் அளிக்க வேண்டும் எனவும், சாத்தான்குளத்தில் நடந்த கொலை விவகாரத்தை தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசியலாக மாற்றியதாகவும், தற்போது காவல்துறை பல் பிடுங்கிய பாம்பு போல் இருப்பதாகவும் கூறினார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் தமிழக காவல்நிலையங்களில் ஆய்வு செய்ய தொடங்கிய பிறகே குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்ததால் கஞ்சா வியாபாரிகளின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுன்சிலர்கள் அனைவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் மேகதாதுவில் அணை கட்ட யார் வந்தாலும் அதை தடுப்பதற்கு பா.ஜ.க, தமிழக அரசுக்கு என்றுமே துணை நிற்கும் எனவும், அ.தி.மு.கவுடன் போட்டி போடும் எண்ணம் எங்களுக்கு இல்லை எனவும் அண்ணாமலை கூறினார்.