லிப்ட் கொடுத்து பெண்ணிடமிருந்து தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பெண்கள் விடுதியில் சகிராபேகம் என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் எத்திராஜ் சாலையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்த சகிராபேகத்திடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் லிப்ட் வேணுமா என கேட்டுள்ளார். இதனை நம்பிய சகிரா பேகம் அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் மன்றோ சிலை மிலிட்டரி கேன்டீன் அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்திய மர்ம நபர் சகிராபேகம் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து பேகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷ் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த தங்க சங்கிலி, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.