அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகரில் வசிக்கும் அரவிந்த் பிரேம்குமார்(30), அரவிந்த் (30) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, செட்டிநாயக்கன்பட்டியில் வசிக்கும் அரசு பெண் ஊழியரின் தந்தை எங்களுக்கு அறிமுகமானார். அவர் தனது மகள் மூலம் எங்களுக்கு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் பணி வாங்கி தர முடியும் என கூறினார். அதற்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனை நம்பி எங்களது தந்தையும் தலா 6 லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாயை அந்த நபரிடம் வழங்கினர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தந்தை, மகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.