ரசிகர்களாகிய உங்களால் நான் பெருமையும், கர்வமும் கொள்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்: “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடி போய் விட்டேன். அனைத்து பொதுவான முகப்பு படங்கள் (common DP), கலவை வீடியோக்கள் (Mash up video), மூன்று மாதமாக நீங்கள் செய்து வந்த கவுண்டவுன் டிசைன்கள் என அனைத்தையும் என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். அனைத்துக்கும் மிக்க நன்றி.
அதையும் தாண்டி நீங்கள் செய்த நற்பணிகளை எல்லாம் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் பெருமை கொள்கிறேன். கர்வம் கொள்கிறேன். மேலும், எனக்கு தொலைபேசி மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், நண்பர்கள், பண்பலை, ஊடகம், தொலைக்காட்சி அன்பர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ” ஜகமே தந்திரம்” பட ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்”, பாலிவுட் இயக்குநர் ஆனந்த எல். ராய் இயக்கத்தில் “அத்ரங்கி ரே” என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.