பள்ளி மாணவ மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று பாபநாசம் ,சேர்வலாறு அணைகளில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது, இதனை மருதூர் தடுப்பணையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது; “பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் இது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஆசிரியர்கள் தவறு செய்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைக்கின்றது. மாணவர்களை மிரட்டுவதும் சமாதானப்படுத்துவது மட்டுமே நிர்வாகத்தின் போக்காக உள்ளது. தவறு செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. கோவையில் நடந்த சம்பவமும் அதேபோல் தான். தவறு செய்தவர்கள் மீது பள்ளி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தால், அந்த மாணவியின் உயிர் போயிருக்காது. இது போன்ற கல்வி நிறுவனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கென தனியாக ரெக்கார்டு உருவாக்கி ஒருமுறை புகார் வந்தால் அவர்கள் மீண்டும் குழந்தைகளுடன் இணைந்து பணியாற்ற எந்தவித வாய்ப்பையும் வழங்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.