நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, ஐ.வி.ஆர் அழைப்பு மூலம் தொலைந்துபோன அல்லது டேமேஜ் ஆன டெபிட்கார்டுகளை பிளாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் உங்களின் டெபிட் கார்டு தொலைந்து போயிருந்தால் அல்லது டேமேஜ் ஆகியிருந்தால், நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லத் தேவையில்லை. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் போனில் இருந்து ஒரே ஒரு அழைப்பை மேற்கொண்டால் போதும். ஐ.வி.ஆர் கால் மூலம் உங்களின் டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.
ஐ.வி.ஆர் மூலம் டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி?
1. 1800 112 211 or 1800 425 3800 என்ற எண்ணுக்கு, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அழைக்க வேண்டும்.
2. அழைப்பு இணைக்கப்பட்டவுடன் கார்டை பிளாக் செய்வதற்காக ‘0’ -வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. இப்போது 2 வகையான ஆப்சனை ஐ.வி.ஆர் உங்களுக்கு கொடுக்கும். 1 – ஐ அழுத்துவதன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு எண்ணை பதிவு செய்து கார்டை பிளாக் செய்யலாம். 2 -ஐ அழுத்துவதன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுத்து பின்னர் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து கார்டை பிளாக் செய்யலாம்.
4. ஒருவேளை நீங்கள் 1-ஐ தேர்ந்தெடுத்தால் டெபிட் கார்டின் கடைசி 5 இலக்க எண்களை பதிவு செய்து, கடைசியில் 1-ஐ அழுத்தி உறுதி செய்ய வேண்டும். 2-ஐ தேர்ந்தெடுத்தால் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி 5 இலக்கங்களை பதிவிட்டு, கடைசியில் 1-ஐ அழுத்தி உறுதி செய்ய வேண்டும்.
5. இப்போது உங்களுடைய டெபிட் கார்டு வெற்றிகரமாக பிளாக் செய்யப்பட்டிருக்கும். அதற்கான மெசேஜூம் உங்களுக்கு வந்திருக்கும்.
இப்போது, உங்களுக்கு புதிய கார்டு தேவை என்றால் 1 -ஐ அழுத்தி புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
1. புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க எண் 1-ஐ அழுத்திவிட்டீர்கள் என்றால், அதன்பிறகு உங்களுடைய பிறந்த தேதியை சரியாக பதிவிட வேண்டும்.
2. சரியாக பதிவிட்டிருந்தால் எண் 1-ஐ அழுத்தி கன்பார்ம் செய்யுங்கள், இல்லையென்றால் 2-ஐ அழுத்தி வேண்டுகோளை நிராகரியுங்கள்.
3. ஒருவேளை நீங்கள் கன்பார்ம் செய்துவிட்டால், புதிய கார்டு விண்ணப்பித்ததற்கான உறுதி எஸ்.எம்.எஸ் உங்களுக்கு வந்திருக்கும்.
புதிய கார்டுக்கான கட்டணம், உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். வங்கி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு புதிய டெபிட் கார்டு வந்தடையும்.
மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றினால் உடனடியாக டெபிட் கார்டை பிளாக் செய்து, புதிய கார்டை எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் பெற முடியும்.