ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அந்நாட்டவர்கள் சீனாவிற்குள் நுழைய சீன அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
சீனாவிற்குள் பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் நுழைய கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது. தற்போது ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடையை விதிப்பதால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில் தோன்றிய போது கடுமையான பயண கட்டுப்பாடுகள் மற்றும் நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு கடுமையான சுகாதாரக்கட்டுப்பாடுகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது சீன அரசு.
இதையடுத்து வெளிநாட்டில் சிக்கி தவிப்பவர்கள் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பலாம் என்று கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், தற்போது ஐரோப்பாவில் கடுமையாக வைரஸ் தொற்று பரவி வருவதால் வேறு நாட்டினர்கள் சீனாவிற்குள் நுழைய தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக பிரிட்டனிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதே போன்று பெல்ஜியத்தில் உள்ள சீன தூதரகம் இந்த அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பிற ஐரோப்பிய நாடுகளிலுள்ள சீன தூதரகங்களிடம் இருந்து இது போன்ற அறிவிப்பு வெளியாகவில்லை.