அஞ்சல் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) ஆகிய திட்டங்கள் உங்களுக்கு 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை அள்ளித் தரக்கூடிய சிறப்பான திட்டங்களாகும். இத்திட்டங்களை போன்றே உங்களுக்கு சிறந்த வட்டியை தரக்கூடிய அஞ்சலகத்தின் சிறப்பான மற்றும் பிரபலமான திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி). இந்த திட்டத்தில் உங்களுக்கு வருடந்தோறும் 6.9 % கூட்டு வட்டி கிடைக்கும். கிசான்விகாஸ் பத்ரா (கேவிபி) எனப்படும் இந்த சிறுசேமிப்பு திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பணத்திற்கு ஒரு பாதுகாப்பையும் வழங்குகிறது.
மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது அஞ்சல் அலுவலகத்தில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. மேலும் இத்திட்டங்களில் உங்களுக்கு நிரந்தர வருமானம், அதிக விகிதத்தில் வட்டி மற்றும் வரிசலுகைகளும் கிடைக்கிறது. பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உங்களுக்கு அதிகளவில் வட்டிவிகிதத்தை வழங்கலாம். அதே நேரம் மியூச்சுவல் ஃபண்டுகள் (அல்லது) பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் நன்றாக ஆராய்ச்சி செய்து அதில் தேர்ந்தவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு முதலீடு செய்வது சிறந்தது ஆகும்.
கேவிபி திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய தொகையானது 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில், அதாவது 124 மாதங்களில் வட்டியுடன் சேர்த்து இரட்டிப்படையும். உதாரணமாக தற்போது இந்த கேவிபி திட்டத்தில் நீங்கள் ரூபாய்.1 லட்சம் டெபாசிட் செய்தால் அடுத்த 124 மாதங்களில் அது இரட்டிப்படைந்து உங்களுக்கு ரூபாய்.2 லட்சமாக கிடைக்கும். இந்த கேவிபி திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூபாய். 1000 டெபாசிட் செய்யலாம். அதன்பின் ரூபாய்.100ன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம். இவற்றில் அதிகபட்ச வரம்பில்லை.
அதேபோன்று மற்ற முதலீடு திட்டங்களை போல் இன்றி இந்த கேவிபி திட்டத்தில் நீங்கள் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறந்துகொள்ளலாம். இவற்றில் டெபாசிட் செய்யப்படும் தொகை நிதியமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட காலத்தின்படி முதிர்ச்சியடைகிறது. இடையில் பணத்தை திரும்பபெற விரும்பினாலும் செய்து கொள்ளலாம். கேவிபி திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் இறந்து விட்டால் அவரின் நாமினி/சட்டப்பூர்வ வாரிசுக்கு கணக்கை மாற்றிக் கொள்ளலாம்