வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டையில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். அவரிடம் தஞ்சாவூரில் வசித்து வரும் ஜெயகுமார் மற்றும் அவரது மனைவியான சுஜாதா ஆகியோர் தங்களது மகனுக்கு மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். அந்த தம்பதியினர் செல்லப்பனிடமிருந்து பணத்தை வாங்கி பல நாட்களாகியும் வேலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் அவர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
அதன்பின் அந்த தம்பதியினர் செல்லப்பனிடம் ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை மட்டுமே கொடுத்துள்ளனர். மேலும் செல்லப்பன் அந்த தம்பதியினரிடம் மீதி பணத்தை கேட்டபோது அவர்கள் அதனை தர மறுத்துள்ளனர். இதனால் செல்லப்பன் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பண மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.