பெங்களூருவில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வாலிபரை போலீஸ் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த பதினேழு வயது மைனர் பெண் ஒருவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மைனர் பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி பேசி வந்துள்ளனர். அந்த வாலிபர் அந்தப் பெண்ணின் தாயாரிடமும் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக இருந்துள்ளனர். மேலும் இருவரும் தங்கள் புகைப்படங்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த வாலிபர் பெண்ணின் தாயாரிடம் அவரது மகளை திருமணம் செய்து வைக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அவரது தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு பெண்ணின் வீட்டார் புகார் அளித்ததை தொடர்ந்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.