அனைவருக்கும் தோட்டம் அமைத்து பராமரிப்பது என்பது ஒரு கலையாகும். தினமும் காலையில் எழுந்ததும் நாம் பராமரித்து வரும் தோட்டத்தில் நடை போட்ட படி அதற்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பது இன்பத்தைக் கொடுக்கும். அதன்படி நம் வீட்டின் தோட்டத்தில் அல்லது மாடியில் செடி அல்லது மரத்தினை நாம் வளர்த்து வருவோம். அதனை நாள்தோறும் கவனித்து வருவது மிகவும் அவசியம். வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் மன மகிழ்ச்சியை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் மன நிம்மதியையும் நமக்கு கொடுக்கும்.
பெற்ற பிள்ளைகளை போல வளர்க்கும் செடிகளில் பூச்சிகளாலும் பூஞ்சைகளும் பாதிப்பு ஏற்படும்போது மன வலியை ஏற்படுத்தும். அதற்கு செயற்கை முறையில் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த பூச்சி மருந்தினை நாம் பயன்படுத்துவோம். அதனால் செடிகள் மற்றும் பூக்கள், பழங்களில் கெமிக்கல் கலப்பது மட்டுமல்லாமல் மண்ணின் தன்மையும் மாறுபடும். அதனால் கெமிக்கல் கலந்த பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இயற்கை உரங்கள் பயன்படுத்தினால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
வேப்பிலை பூச்சி மருந்து:
இயற்கையாகவே வேப்பிலையில் அதிக அளவு கசப்புத் தன்மை இருக்கும். அதனால் பூச்சிகள் நெருங்கவே நெருங்காது. வேப்பிலையின் வாசம் அனைத்து பூச்சிகளையும் விரட்டியடிக்கும். அதனால் வேப்பிலை ஒரு சிறந்த பூச்சிக் கொல்லி மருந்து ஆகும். பழங்காலத்தில் விவசாயிகள் வேப்பிலை இலை, வேப்பிலை காய் மற்றும் பழத்தை உரமாக பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். நமது வீட்டில் உள்ள வேப்பிலை கொண்டு பூச்சி மருந்து நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
இயற்கை முறையில் பூச்சி கொல்லி மருந்து தயாரிப்பதற்கு சிறிதளவு வேப்பிலையை எடுத்துக் கொண்டு அதனை சுத்தமான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதன் பிறகு சூடான நீரில் 5 லிருந்து 10 நிமிடம் வரை மிதமான தீயில் வேப்பிலைகளை போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் அந்த தண்ணீரை பச்சை நிறமாக மாறுவதை நாம் காணலாம். அதன் பிறகு அந்த வேப்பிலை நீரில் பேக்கிங் பவுடர் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தயார் செய்த இந்தப் பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு நீங்கள் வளர்த்துவரும் செடிகளில் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை வேளையில் இதனை தெளிக்க வேண்டும். இதன் மூலமாக உங்கள் செடிகளில் பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் தாக்கம் குறையும். இயற்கை முறையில் இந்த மருந்து இருப்பதால் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் நமக்கு கிடைக்கும்.