Categories
மாநில செய்திகள்

உசைன் போல்டை விட வேகமாக ஓடும் இந்தியர் : முறையான பயிற்சி வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு!

கர்நாடகாவில் ஸ்ரீநிவாஸ் கவுடா என்ற இளைஞர் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் தட்சின கன்னடா பகுதியில் ‘கம்பாளா’ என்ற பெயரில் பாரம்பரியமிக்க எருமை மாட்டு பந்தயம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தென் கன்னடா மாவட்டத்தில் உள்ள மூடபித்ரி என்ற கிராமத்தில் கம்பாளா போட்டி நடந்தது. இதில் 250 ஜோடி எருமை மாடுகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீநிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் தனது எருமை மாடுகளுடன் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்து முதல் பரிசை வென்றார். 

சேறு நிரம்பியிருக்கும் வயல் பகுதிகளில் எருமைகளை வண்டிகளில் பூட்டி, அதனுடன் சேர்ந்து விவசாயிகளும் ஓடுவார்கள். இந்நிலையில் கம்பளா போட்டியில் 13.62 விநாடிகளில் கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சீனிவாச கெளடா. இதனையடுத்து 142.50 மீட்டரை 13.62 வினாடிகளில் ஸ்ரீநிவாஸ் கவுடா கடந்திருக்கிறார் என்றால், 100 மீட்டரை அவர் 9.55 வினாடிகளில் கடந்திருக்கிறார். 

ஒலிம்பிக்கில் 100 மீட்டரை கடக்க ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் 9.58 வினாடிகள் எடுத்துக் கொண்டார். அப்படிப் பார்க்கும்போது, அவரது சாதனையை ஸ்ரீநிவாஸ் கவுடா முறியடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்துத் தெரிவித்திருந்தார். 

மகிந்திரா தலைவர் ட்விட்டுக்கு பதில் அளித்து மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த பயிற்சியாளர்கள் மூலம் ஸ்ரீநிவாஸ் கவுடாவுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படும். 

ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தின் தன்மை, தரம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் திறமையான ஒருவரும் வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடாது என்பது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். கெளடாவின் சாதனையைப் பாராட்டி மத்திய அமைச்சர் ஷசி தரூரும் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |