அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் முதல் 5 கையெழுத்துக்களில் ஒன்று நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டமாகும். இத்திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையானது மிச்சயமாகி உள்ளது.
அதே சமயம் குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே இந்த இலவச பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் நீண்டநேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சில பகுதிகளில் பேருந்தில் நடத்துனர்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் மரியாதையோடு நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்குமாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, சட்டப்பேரவையில் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளதாவது, மாநகர பேருந்தில் பெண்களுக்கு 40 சதவீதம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 61.82 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மேலும் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் என்பது முதல்வரின் ஒரு கனவுத் திட்டமாகும். இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 1,380 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.1,510 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு பேருந்துகளில் மகளிர் பயணம் திருப்திகரமாக உள்ளது எனவும் கூறியுள்ளார். எனவே அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தால், போக்குவரத்து கழகத்தை எப்படி நடத்துவது என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறி, அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு பதிலளித்துள்ளார்.