பாலியல் வன்கொடுமையால் பழங்குடியின பெண்கள் 6 பேர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலமான திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விதுரா மற்றும் பாலோடு காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் 192 மலைவாழ் பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் காவல்துறையினர் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக போதைப் பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகிய விரோத செயல்கள் அதிகமாக அரங்கேறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விதுராவில் பழங்குடியினர் பெண்களான 2 பேர் தற்கொலை செய்த சம்பவம் பிபரபரப்பை ஏற்படுத்தியதால், மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், அண்மையில் நடந்த பெண் தற்கொலைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து அந்த துறை சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில், கடந்த 2 மாதத்தில் மட்டும் விதுரா, பாலோடு மண்டலத்தில் 8 பழங்குடியினர் பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், அதில் 6 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 8 பெண்களில் 2 சிறுமிகள் அடக்கம் என்றும், மீதம் இருக்கும் அனைவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பழங்குடியின பெண்கள், போதைப் பொருள் கடத்தல் கும்பல் மற்றும் போதை ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும், அதை யாரும் கேட்பாரற்று பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் சமூக அவலம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக கண்டனம் எழுந்து உள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.