இறந்த கணவருடன் குடும்பம் நடத்திய பெண்ணை காவல்துறையினர் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் அசோக்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மினி என்ற மன நலம் பாதிக்கப்பட்ட மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்த ஆர்த்தி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி தனது தந்தையின் செல்போனை தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் அசோக்பாபு அழைப்புகளை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி தனது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அசோக்பாபு உடலில் துணிகள் இல்லாமல் இறந்து கிடந்துள்ளார். மேலும் அருகில் பத்மினி இருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அழுகிய நிலையில் இருந்த அசோக்பாபுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட பத்மினியை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பத்மினி இறந்த தனது கணவருடன் 2 நாட்கள் வாழ்ந்து தெரியவந்துள்ளது.