காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பி.எஸ்.சி. படித்து வந்துள்ளார். இவரும் ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கல்லூரிக்கு செல்லும் வழியில் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம்.
இதனை அறிந்த கிரீஷ்மாவின் பெற்றோர் அவருக்கு இன்னொரு வாலிபருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த ஷாரோன் ராஜ் தனது நண்பர் ஒருவருடன் கிரீஷ்மா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் தனது காதலியை சந்தித்து பேசிவிட்டு திரும்பிய அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரின் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் விஷ மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு கிரீஷ்மா விஷம் கொடுத்தது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷாரோன் ராஜ் பெற்றோர் கிரீஷ்மா தனது குடும்பத்தினருடன் திட்டமிட்டு தனது மகனை கொன்று விட்டதாக கூறினர். அதில் கிரீஷ்மாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் அவருக்கு திருமணமானால் முதல் கணவர் இறந்து விடுவார் என கூறியதாகவும், அதன் காரணமாக ஷாரோன் ராஜை ரகசிய திருமணம் செய்துவிட்டு அவரை கொன்று விட்டதாக கூறியுள்ளார். அதன் பின்னர் கிரீஷ்மாவை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூகுளில் கொலை செய்வது எப்படி என்ற தகவலை தேடிய விளம்பரத்தை காட்டினர். அதன் பின்னர் அவர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை நெடுமங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கழிவறைக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு சென்ற கிரீஷ்மா அங்கிருந்த கிருமி நாசினியை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொலை விவகாரத்தில் கிரீஷ்மாவின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஷாரோன் ராஜ் காதலி வீட்டுக்கு சென்ற போது அதனை கிரீஷ்மாவின் தாயார் பார்த்துள்ளார். அதனால அவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிரீஷ்மா விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் அவரது தாய் அளித்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்