கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார். இவ்வாறு மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையும் நடத்தினார். இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.