உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று பேரவை கூடியதும் முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகள் எழுப்பி குற்றச்சாட்டை முன்வைத்தார்..இதனால் முதல்வர் ஸ்டாலின் – ஈபிஎஸ் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.. அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்..
வெளிநடப்புக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல், தற்போது தேர்வு எழுத முடியாத அச்சத்தில் மாணவர் தனுஷ் உயிரிழந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்?. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற அதிமுக அரசு அனைத்து சட்டப் போராட்டங்களையும் நடத்தியது என்று கூறினார்..