பிரதமர் மோடி அறிவித்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் சுமார் இரண்டு கோடி பேர் அதனை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்த காரணத்தினால் இலவச இணைப்பு பெற்ற சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகள் ஒருமுறைகூட சிலிண்டர் வாங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் 2016 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நாடு முழுவதும் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச இணைப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் இதன் 2.o திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை எச்பி நிறுவனம் 2 கோடியே 40 லட்சம் குடும்பங்களுக்கும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 4 கோடியே 24 லட்சம் குடும்பங்களுக்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 2 கோடியே 35 லட்சம் நிறுவனங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி இருக்கிறது. மேலும் மொத்தமாக 8 கோடியே 99 லட்சம் பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இலவச இணைப்பு பெற்றவர்களில் 90 லட்சத்து 6 ஆயிரம் பேர் திரும்ப ஒருமுறை கூட சிலிண்டர் வாங்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் மூலமாக தெரிய வந்திருக்கிறது. மேலும் இலவச இணைப்பு பெற்ற சுமார் 9 கோடி பேரில் ஒரு கோடியே 8,000 பேர் ஒரு தடவை மட்டுமே சிலிண்டர் நிரம்பியிருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் சுமார் 2 கோடி பேர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெற்ற இலவச சிலிண்டரை பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதற்கான காரணம் ஏழை, எளிய மக்கள் காசு கொடுத்து சிலிண்டர் நிரப்ப முடியாத அளவிற்கு விலை உயர்ந்து இருப்பது தான் என்பது திட்ட பயனாளிகளின் கூற்றாக இருக்கின்றது.