பட்டாசு கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரளம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பட்டாசு கடை செயல்பட்டு வந்துள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றிய செயலாளர் லிங்கம் தலைமையில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பத்மினி, இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் பட்டாசு கடை மூடப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் அதிகாரிகள் பட்டாசு கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.