மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை முதன்மை சாலையில் அரசு மதுக்கடை ஒன்று ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெண்கள், பொதுமக்களிடம் மது பிரியர்கள் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து பொது மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் சுகுமார், இன்ஸ்பெக்டர் ஜெயா உள்ளிடோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.