நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத ரீதியிலான மோதல்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏற்படுவதை தடுக்க அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி உத்திரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான்,அக்ஷய திருதியை போன்ற பண்டிகைகள் வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதி ஒரே நாளில் வர உள்ளது. அதனால் அன்றைய நாளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில் போலீசார் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை விடுமுறை ரத்து. ஏற்கனவே விடுமுறையில் உள்ளவர்களின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுமுறையில் உள்ள போலீசார் அடுத்த 24 மணி நேரத்தில் பணிக்கு வர வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.