சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலையில் தனியார் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இந்நிலையில் எஸ்டேட் நிர்வாகத்தினர் கடந்த டிசம்பர் மாதம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை இதுவரை கொடுக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பள பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் தாசில்தார் சித்துராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுபற்றி காவல்துறையினர் கூறும் போது, பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எஸ்டேட் நிர்வாகத்தினர் கடந்த டிசம்பர் மாத சம்பளத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிவிட்டனர். கடந்த ஜனவரி மாதம் சம்பளம் வருகிற 10-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என எஸ்டேட் நிர்வாகத்தினர் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளனர்.