ஜவுளித் தொழிலை காக்கும் வகையில் பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் துறையாகவும் ஜவுளித் தொழில் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை கொண்ட ஜவுளித்துறை பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றது.
2020 -21ம் நிதி ஆண்டு துவக்கத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பஞ்சின் விலை அந்த ஆண்டு இறுதியில் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த அறுபது நாட்களில் மட்டும் பஞ்சு விலை கேண்டி ஒன்றுக்கு 12 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தரமற்ற பஞ்சு நூல் உற்பத்தியால் செலவினம் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆலைகள் பல்வேறு வழிகளில் நூல் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுள்ளனர். எனவே தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான ஜவுளித் தொழிலை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுக்கும் வகையில் பஞ்சு விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும் மத்திய அரசும் எடுக்க வேண்டுமென அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.