திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் திருவள்ளுவர் நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரகாஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய ஷிவானி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் உறவினரான ராஜேஷ் குமார்(31)-கீர்த்திகா(24) தம்பதியினர் அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஷிவானியுடன் கீர்த்திகா நெருக்கமாக பழகியுள்ளார்.
கடந்த மாதம் 20-ஆம் தேதி மல்லிகாவின் வீட்டிற்கு சென்ற ராஜேஷ்குமார்- கீர்த்திகா தம்பதியினர் கௌரியிடம் ஷிவானியை தங்களது ஊருக்கு அழைத்து சென்று சிறிது நாள் வைத்திருந்து தருவதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பரிதாபப்பட்ட கௌரி தனது மகளை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார். கடந்த 2- ஆம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக கூறி ஷிவானியை மதுரை அரசு மருத்துவமனையில் கீர்த்திகா சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சிறுமியின் உடலில் ஆங்காங்கே தீக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த ஷிவானியின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தனது மகளைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஷ் குமாரையும், கீர்த்திகாவையும் பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கீர்த்திகா செங்குளத்துப்பட்டிக்கு சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் வைத்துள்ளார். அப்போது சேட்டைகள் அதிகமாக செய்ததால் கீர்த்திகாவும், ராஜேஷ் குமாரும் ஷிவானியின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2-ஆம் தேதி சிறுமி வீட்டுக்குள் இயற்கை உபாதை கழித்ததால் கோபமடைந்த கீர்த்திகா கீழே தள்ளியதால் சிறுமியின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.