திடீரென பற்றிக்கொண்ட நெருப்பால் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தில் கூலித்தொழிலாளியான வேல்முருகன் என்பவர் தனது மனைவி மதிவதனாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு தெய்வ வெனுசியா மற்றும் தெய்வக கனுசியா என்ற இரு குழந்தைகள் இருந்துள்ளனர். வேல்முருகனின் வீட்டிற்கு அருகே உள்ள விநாயகர் கோவிலில் தெய்வ வெனுஷியா, தெய்வ கனுசியா உள்ளிட்ட நான்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து தெய்வ வெனுசியா சாமி கும்பிடுவதற்கு கோவிலின் உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்குள்ள விபூதியை எடுக்க முயன்ற போது தெய்வ வெனுசியா, அணிந்திருந்த உடையில் நெருப்பு பற்றிக்கொண்டது.
இதனால் உடையில் பற்றிக்கொண்ட நெருப்போடு சிறுமி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தபடி வீட்டிற்குள் ஓடி வந்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து விட்டார். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியோடு தனது மகளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.