உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோத் ஆரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய மகன் புல்கிட் ஆரியா ரிஷிகேஷில் வனந்த்ரா என்ற ரிசார்ட்டை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அங்கிதா வேலை முடிந்தம் வீடு திரும்பவில்லை. இதனால் அங்கிதாவின் தந்தை மற்றும் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அங்கிதாவை புல்கிட் ஆர்யா கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கு ரிசார்ட்டில் வேலை பார்க்கும் 2 ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், விபச்சாரத்தில் ஈடுபட மறுத்ததால் கால்வாயில் தள்ளி அங்கிதாவை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் வினோத் ஆர்யா மற்றும் அவருடைய மகன்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக உத்தரகாண்ட் முதல்வர் சம்பந்தப்பட்ட ரிசார்ட்டை இடிப்பதற்கு உத்தரவிட்டார். இருப்பினும் பொதுமக்கள் ரிசார்ட்டின் பல பகுதிகளை தீ வைத்து எரித்ததோடு, பாஜக எம்எல்ஏவின் காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் போராட்டம் தீவிரமடைந்ததால், வினோத் ஆர்யா, புல்கிட் ஆர்யா மற்றும் அவருடைய சகோதரர் அங்கித் ஆர்யா ஆகியோரை பாஜக கட்சியிலிருந்து நீக்குவதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் பாஜக கூறியுள்ளது.