உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள இரும்பு பாலம் மாரியம்மன் கோவில் தெருவில் கருப்பு தேவர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன்களுடன் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கருப்பு தேவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மிகவும் மனமுடைந்த கருப்பு தேவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருப்பு தேவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் கருப்பு தேவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.