வெறும் 16 மாதங்களேயான சிறுவன் தலையில் காயத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மீண்டுவரவில்லை. அவரால் 2 குழந்தைகள் புது வாழ்வு பெற்று மருத்துவமனையில் இருந்து மீண்டுள்ளனர். சென்ற ஆகஸ்ட் 17ம் தேதி ஒன்றரை வயது சிறுவன் மருத்துவமனையில் தலைக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 25ம் தேதி சிறுவன் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது பெற்றோர் முன் வந்தனர்.
அதன்பின் சிறுவனின் சிறுநீரகமும், கல்லீரலும் தானமாகப் பெறப்பட்டு அன்றைய தினமே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டது. மேலும் சிறுவனின் இருதயவால்வுகள் மற்றும் கருவிழிகள் உடல் உறுப்பு பாதுகாப்பு வங்கியில் சேமிக்கப்படுள்ளது. இதனிடையில் சிறுநீரகம் 5 வயது சிறுவனுக்குப் பொருத்தப்பட்டது. இந்தியாவிலேயே சிறுநீரக மாற்றுசிகிச்சை செய்து கொண்ட மிக இளம்வயது நோயாளியாக அந்த சிறுவன் இருக்கிறார்.
இவருக்கு 2 சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் மஞ்சுநாத் கூறியதாவது, குழந்தைகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வது மிகவும் கடினம் ஆகும். அவர்களது நரம்புகள் மிகவும் அடர்த்தியாகவும், குறுகியதாகவும் இருக்கும். அவற்றில் ஒரு சிறுதவறு நேர்ந்துவிட்டாலும் மீண்டும் சரிசெய்ய இயலாது. மேலும் தானம்பெற்றது ஒரு குழந்தையுடயது என்பதால் அந்த சிறுநீரகப் பை முற்றிலும் வளர்ச்சியடையாததாக இருந்தது.
சிகிச்சையின் போது கொஞ்சம் பதற்றப்பட்டாலும் நிலைமை மோசமடைந்து விடும் நிலையில், அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம் என்று கூறினார். உடல் உறுப்புகளைப் பெற்ற சிறார்கள் விரைவாக குணமடைந்து வருகின்றனர். மீண்டுமாக அவர்கள் பள்ளிக்குச் செல்ல இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று டாக்டர் சந்தீப் அகர்வால் கூறினார். உடல் உறுப்புகளை தானம் அளித்த குழந்தை சுமார் 8 நாட்கள் உயிருக்குப் போராடினான். அவர் உடல்உறுப்புகளை தானமளிக்கவே பிறந்தவர் என கூறி மருத்துவர் தீபக் குப்தா நெகிழ்ச்சியடைந்தார்.