உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 6வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.
பொதுவாக மூளை சாவு அடைந்தவர்கள் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடிகிறது. தமிழகத்தில் சுமார் 1,382 கொடையாளர்கள் இடமிருந்து, 8,123 உறுப்புகள் பெறப்பட்டு உள்ளது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் தமிழக அரசு கடந்த 5 முறை மத்திய அரசிடம் இருந்து விருது பெற்றிருந்தது.
இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையும் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருதை தமிழக சுகாதாரத்துறைக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று வழங்குகிறார். புதுக்கோட்டையில் காணொளி மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விருதை பெற இருக்கிறார்.