நிதி நிறுவன உரிமையாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தப்பட்டியில் இருக்கும் தோட்டத்து வீட்டில் நிதி நிறுவன அதிபரான பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அரிமா சங்கத்தின் துணைத் தலைவராக இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி அரிமா சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் பாலசுப்ரமணி வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நண்பர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது பாலசுப்ரமணி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே தென்னம்பிள்ளை தோட்டம் என்ற இடத்தில் தீயில் கருகிய நிலையில் பாலசுப்ரமணி சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாலசுப்பிரமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது பாலசுப்பிரமணிக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் பாலசுப்பிரமணியனின் மகள் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் விமல்ராஜ் என்பவர் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கும், விமல்ராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனை அறிந்த பாலசுப்பிரமணி தனது மகளை கண்டித்து அவரது செல்போனை பறித்து உடைத்துவிட்டார். மேலும் விமல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து தனது மகளுடன் பழகக்கூடாது என பாலசுப்பிரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து விமல்ராஜ் நத்தப்பட்டியில் இருக்கும் வீட்டிற்கு சென்று காதலியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது உனது தந்தை இரண்டு பேரையும் பிரித்து விடுவார். எனவே அவரை கொன்று விடலாம் என விமல் ராஜ் ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரிமா சங்க கூட்டத்தில் பங்கேற்ற விட்டு வீட்டிற்கு திரும்பிய பாலசுப்பிரமணியை கொலை செய்ய விமல் ராஜ் மற்றும் அவரது நண்பர்களான சரவணன் அஜித் ஆகியோர் திட்டமிட்டனர். அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்த பாலசுப்பிரமணியின் தலையில் விமல் ராஜ் இருந்து கம்பியால் அடித்துள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலசுப்பிரமணி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு விமல்ராஜ் மற்றும் சரவணன் ஆகியோர் அங்கிருந்து தப்பித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் விமல்ராஜ் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து பாலசுப்பிரமணியின் மகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.