தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர்-பூங்கா ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக சென்ற மின்சார ரயில் அந்த வாலிபரின் மீது மோதியது. இதனால் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.