தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியில் ராமகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், கிருத்திகா(17) என்ற மகளும் உள்ளனர். இதில் கிருத்திகா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகண்ணன் உடல்நலம் சரியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனை அடுத்து தந்தையின் உடல் நலம் சரி இல்லாததால் மன உளைச்சலில் இருந்த கிருத்திகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.