நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினத்தில் வசித்து வரும் செல்வம் என்பவர்(52) நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பட்டறையில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து பட்டறையில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.