தனது மகனை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த ஜெயபால், சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு சேதுபதி (29) என்ற மகனும், ஜிது என்ற மகளும் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரையும் பெற்றோர் கடன் வாங்கி பிடெக் படிக்க வைத்துள்ளனர். இதில் மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் திடீரென சேதுபதிக்கு உடல்நல குறைவு ஏற்ப ட்டதாக கூறி நிறுவனத்தின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை போன்ற பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்று வந்தார். சேதுபதிக்கு மூளை நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் கடந்த 33 மாதங்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கின்றார். இந்த நிலையில் அவரது சிகிச்சைக்கு பல்வேறு தரப்பினிடம் உதவி கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே குழந்தைகளை படிக்க வைத்ததால் கடன் தொகையை கட்டி விட்டு தற்போது வாடகை வீட்டில் அந்த வாடகையை கூட கொடுக்க முடியாத சூழலில் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர். இதனை அடுத்து சாந்தா தனது மகனின் மூளை நரம்பு சிகிச்சைக்காக அவரை பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும் எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.