தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.