அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஆண்டகலூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு விடுதியிலேயே உணவு சமைத்து வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், உப்பு, காரம் இல்லாமல் இருப்பதாக மாணவர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர்.
ஆனாலும் விடுதி நிர்வாகத்தினர் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலையில் வழங்கப்பட்ட தக்காளி சாதம் உப்பு காரம் எதுவும் இல்லாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த உணவுடன் விடுதிக்கு எதிரே சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.