இலங்கை நிதி மந்திரி பஸில் ராஜபக்சே இந்தியா வரவிருக்கிறார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்னிய செலவாணி கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இலங்கை நாடு பொருளாதாரத்தில் அடிபட்டிருக்கிறது. மேலும் உணவுப் பொருள்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற நெருக்கடியை போக்க இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது. இதனால் கடந்த மாதம் இந்தியா 90 கோடி டாலர் கடன் கொடுத்தது. இந்த கடன் அன்னிய செலவாணி கையிருப்பு அதிகரிக்கவும், உணவுப் பொருள்கள் இறக்குமதிக்காகவும் அறிவித்தது. இந்நிலையில் இலங்கையின் நிதி மந்திரி பஸில் ராஜபக்சே இந்தியாவுக்கு வரவிருக்கிறார்.
இது பற்றி இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் கூறியதாவது, “கடந்த டிசம்பர் மாதம் நிதி மந்திரி பஸில் ராஜபக்சே இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது பயனுள்ளதாக இருந்தது.மேலும் இந்தியாவிடமிருந்து 240 கோடி டாலர் நிதியுதவி கிடைத்தது. இன்னும் இரண்டு வாரங்களில் அவர் மீண்டும் இந்தியாவுக்கு செல்ல இருக்கிறார். அப்போது இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார நிவாரண தொகுப்புத் திட்டம் உறுதி செய்யப்படும். இதனைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக ரூ 7,500 கோடி கடன் பெறப்படும். அதனால் ராஜபக்சேவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மேலும் இலங்கையின் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் தலையீடு நேர்மையாக அமைந்துள்ளது. குறிப்பாக இலங்கைக்கு மூன்றில் ஒரு பங்கு சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்து வருகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.