சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த நாணயம் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருகோபனப்பள்ளி யில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக்குமார்(11) என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 26-ஆம் தேதி சிறுவன் தவறுதலாக 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நாணயம் சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்தது தெரியவந்தது.
இதனால் மருத்துவர்கள் நாணயத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அதன் படி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சபரிஷ், சுஜய்குமார், மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் அந்த பிரபு, சுபா, பிரவீன் குமார் ஆகியோர் தலைமையில் அதிநவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உணவுக்குழாயில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயம் உள்நோக்கி கருவி மூலம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. அதன் பிறகு சிறுவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.