ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு வினியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவு உறுதி செய்யப்படுகிறது. அதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, குறைவான பாதிப்புடைய குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 51 பேர் அந்தியூர் அருகே இருக்கின்ற பருவாச்சி செம்புளிச்சாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், குடிநீர் வசதிகள் கூட ஏற்படுத்தி தரவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும் மாத்திரை உட்கொள்வதற்கு சுடு தண்ணீர் தருவதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லை என்றும், அங்குள்ள குப்பைகளை சுத்தம் செய்யாமல் தேக்கி வைத்திருப்பதாகவும் அங்குள்ள கொரோனா நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு வரவில்லை என்றும், தங்களுக்கான உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு வந்து விநியோகம் செய்வதாகவும் கூறியுள்ளனர். இவ்வாறான சூழல் தங்களை மேலும் அதிக அளவிலான கொரோனா பாதிப்புக்கு கொண்டு செல்லும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதனால் அங்குள்ள நோயாளிகள் அனைவரும் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த காட்சியை நோயாளிகளில் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த பவானி தாசில்தார் உடனடியாக பள்ளி வளாகத்திற்கு விரைந்து சென்று, நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் அனைத்து விதமான தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.