கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மற்றும் குரு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர் ஆகியோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்களை வகுத்திருக்க வேண்டும்.
இதனையடுத்து இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் காய்கறிகள், அரிசி ஆலை, பழங்கூழ் தயாரித்தல், உலர் மாவு மற்றும் இட்லி தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில் தொடங்கலாம். இந்நிலையில் முதலீட்டாளர்கள் திட்ட தொகையில் 10 சதவீத பணத்தை செலுத்தினால் 90 சதவீத பணம் வங்கிகளின் மூலமாக கடனாக வழங்கப்படும். அதில் அரசு திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தில் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.