மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் அனைத்து உண்டியல்களும் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது.
இதில் 1 கோடியை 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 ரூபாய், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 0.540 கிராம் தங்கம், 323 அயல்நாட்டு நோட்டுகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த உண்டியல் எண்ணும் பணியானது கோவிலின் துணை கமிஷனர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.