உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தொகுதி மக்களுக்கு வேஷ்டி-சட்டை, அரிசி, துணிப்பை, சோப்புகள் வழங்கப்பட்டது, அதுமட்டுமில்லாமல் இஸ்திரி பெட்டி, தையல் மிஷின், மாற்றுத்திறனாளி வாகனம் போன்றவற்றையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பள்ளிகளை கண்டறிந்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு குழு அமைத்து கணக்கெடுப்பு பணியை செய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி குறித்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி “உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் அமைச்சராக வர வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல. தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம். மக்களுக்கு உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் மட்டும் சுருங்கி விடக்கூடாது” என்று தெரிவித்தார்.