தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடந்த தோ்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவருடைய வெற்றியை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்எல்.ரவி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அந்த வேட்பு மனுவில், தனது மீதான குற்ற வழக்கு விபரங்களை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கவில்லை என கூறியிருந்தாா். இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணையில் இருக்கிறது.
கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மனுதாரா், எதிா்மனுதாரா் சார்பில் வாதங்களை தொடங்காமல் கால அவகாசம் கோரப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தோ்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் உதயநிதி தரப்பில் வாதிடும்போது, மனு தாக்கல் செய்தபோது செலுத்த வேண்டிய வைப்புத் தொகையை மனுதாரா் செலுத்தாத காரணத்தால் இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டது.
அதன்பின் வழக்கின் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி தீர்பளித்தபோது, வைப்புத் தொகை செலுத்தாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதி அளிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதனிடையில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிா்த்து பிரேமலதா என்ற வாக்காளா் தொடுத்த வழக்கு மட்டும் தற்போது நிலுவையில் இருக்கிறது..